புதன், 12 ஜனவரி, 2011

பேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும்



- சின்னராஜா விமலன் -


ஈழத்து இலக்கிய வரலாற்றை பொறுத்தவரையில் 1960 காலப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.1954 இல் தோற்றம் பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புபட்டிருந்த எழுத்தாளர்கள் உலகளவில் அன்;றைய காலப்பகுதியில் வியாபித்திருந்த மார்க்சிய அரசியலின் தாக்கத்திற்கு உள்ளாகி அதன் பிரதிபலிப்பு அவர்களின் படைப்புகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தது.ஒரு சங்கமாக இயங்கிய அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப் பரிவர்த்தனைகளின் ஊடாட்டமும் இவ்வகைப்பட்ட இலக்கியம் தோன்றுவதற்கு வழிகோலியது.அத்தோடு 1950களின் நடுப்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தமது நெறிப்படுத்தலின் கீழ் தேசிய இலக்கியம் பற்றி கூறிய கருத்துக்களும், முன்னெடுப்புகளும் முனைப்புப் பெற்ற காலமாகவும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய காலமாகவும் அது விளங்கியது.பல்கலைக்கழகத்தில் படித்து கலாநிதி பட்டம் பெற்ற காரணத்தினால் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு முற்போக்கு அணியினர் செயற்பட்டு வந்தனர். குறிப்பாக இவ்விரு பேராசிரியர்களும் ஈழத்திலக்கியத்தின் பிதாமகர்களாகவே கொள்ளப்பட்டனர்.

அதிலும் அன்றைய காலப்பகுதியில் பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக அனைத்து எழுத்தாளர்களுமே முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் இருந்தனர்.இதற்கு முற்போக்கு, நற்போக்கு அணிகளுக்கெதிராக “மெய்யுள்” தத்துவத்தை உருவாக்கிய மு.தளையசிங்கத்தின் அணியினரும் விதிவிலக்கல்ல. மு.தளையசிங்கம் உயிருடன் இருக்கும் வரையில் அவர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு ஏங்கியதில்லை.ஆனாலும் அவர் இறந்த பிற்பாடு மு.தளையசிங்கத்தின் அணியினர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக முயற்சி மேற்கொண்டதை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மு.தளையசிங்கத்தின் நினைவு மலராக ‘பூரணி’ சஞ்சிகை வெளியிட்ட இதழுக்கு அதன் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேராசிரியர் கைலாசபதி “இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு : ஒரு புத்திஜீவியின் இரண்டக நிலை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார்.இருப்பினும் விமர்சனத்திற்கு அஞ்சிய ஆசிரியர்கள் கட்டுரையை வெளியிட விரும்பவில்லையென பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்” நூலில் மேற்படி கட்டுரையின் கீழ் அடிக்குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளமை போதுமானது.கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு வேண்டி நாம் அவரிடம் கட்டுரை கேட்கவில்லை என்று ‘பூரணி’ ஆசிரியர்கள் கூறினால் மேற்படி கட்டுரையை பிரசுரித்திருக்கலாமே? மு.தளையசிங்கம் இறந்த பிற்பாடாவது பேராசிரியர் கைலாசபதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில் அணுகி இருக்கலாம்.

பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு எழுத்தாளர்கள் தவம் கிடந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம் பேராசிரியர் கைலாசபதியோடு வீண் மனஸ்தாபத்தை விரும்பாது அவரின் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற தோறணையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதராகக் காட்டும் முயற்சியில் அன்று வெளிவந்த ஓரிரு சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் விளங்கியுள்ளனர் என்பதும் அப்பழுக்கற்ற உண்மையே. 1979 ஆடியில் வெளிவந்த ‘சமர்’ இரண்டாவது இதழில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்” கட்டுரைக்கு பதிலாக அ.யேசுராசா எழுதிய “ குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை” எனும் கட்டுரையை அனுப்பி இருந்த போதிலும் ‘சமர்’ இதழின் ஆசிரியரான டானியல் அன்ரனி அதனை பிரசுரிக்க மறுத்து விட்டார்.அது பின்னர் அ.யேசுராசாவையும் ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘அலை – 13’ இதழிலேயே பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேராசிரியர் கைலாசபதியை விமர்சித்தவர்களுள் ஈழத்தில் எஸ்.பொன்னுத்துரையும், மு.தளையசிங்கமும் தத்தமது தத்துவங்களை நிலைநாட்டுவதற்காக அவரை கடுமையாகச் சாடியிருந்தனர். இவர்களில் மு.தளையசிங்கம்
“முற்போக்கு எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட கதைகள் எவையும் இக்காலத்தின் முக்கிய பிரச்சினையான தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளாது ஆலைத் தொழிலாளி, முதலாளி போராட்டக் கதைகள் தோன்றுவதற்கு தினகரன் ஆசிரியராக இருந்த கைலாசபதியே காரணமாக இருந்தார்”
என தனது ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் குறிப்பிடுவது நோக்கற்பாலது.

அவ்வாறே தமிழ்நாட்டிலும் வெங்கட் சாமிநாதன் குறிப்பிடத்தகுந்தவர். பேராசிரியர் கைலாசபதி எழுதி 1968 இல் வெளியான “தமிழ் நாவல் இலக்கியம்” நூல் குறித்து வெங்கட் சாமிநாதன் 1970 ‘நடை’ இதழில் “ மார்க்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்” என்ற தலைப்பில் விமர்சனம் செய்துள்ளார்.இதற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் மல்லிகையில் 1974ஃ75 காலப்பகுதியில் “மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்” என்ற கட்டுரைத் தொடரில் பதிலளித்துள்ளார்.


ஆனால் பேராசிரியர் கைலாசபதியோ தன்னை தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடராக என்றும் கருதியதில்லை. இதற்கு உதாரணமாக தினகரனில் மரபுப்போராட்டம் இடம்பெற்ற போது தன்னுடன் மாற்றுக்கருத்துடைய எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றோர்களது கருத்துக்களையும் பிரசுரித்திருந்தமையை சுட்டிக்காட்டலாம்.


தேசிய இலக்கியமானது விதேசிய எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, ஜனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்பவற்றை வௌ;வேறு அளவிலும், வகையிலும் ஆதாரமாய் கொண்டு படைக்கப்படும் இலக்கியமென படைப்பாளிகள் கூறினாலும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் உட்கிடையாக ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களை பாராட்டுதல் கூடாது என்று பேராசிரியர் கைலாசபதி தனது “இலக்கிய சிந்தனைகள்” நூல் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.(தடித்த எழுத்துக்கள் என்னால் இடப்பட்டவை) அந்தவகையில் முற்போக்கு இலக்கிய அணியை சேர்ந்தவர்கள் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது படைப்புக்களை உருவாக்கி இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி முற்போக்கு இலக்கிய அணியை சார்ந்தவர்கள் கலைத்துவம் குறைந்த படைப்புக்களை படைத்த பொழுது தம் அணியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவற்றை உன்னதப்படுத்தி கூறியமை தேசிய இலக்கியக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக எனக்குப் படுகின்றது.


இலங்கை தேசிய இலக்கியத்தில் பிராந்திய ரீதியான வகைப்படுத்தல்களில் ஒன்றான மலையக இலக்கியத்தை சரிவர இனங்கண்டு அதற்குரிய அந்தஸ்தை வழங்கியதிலும் அதனை நெறிப்படுத்தியதிலும் பிரதான பங்கு பேராசிரியர் கைலாசபதிக்கு உண்டு


நான் முன்பு குறிப்பிட்டது போல அறுபதுகளில் முனைப்புப் பெற்ற மார்க்சிய சிந்தனைகளின் விளைவால் நமது தேசிய இலக்கியங்கள் அவற்றின் வழி உந்தப்பட்ட படைப்புக்களை சிருஷ்டித்திருந்தன. ஆனால் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை வாலாயமாக கொண்டிருந்த போதிலும் மார்க்சிய சிந்தனைகளின் பிடிப்பிற்கு ஆளாகாமலே தமது படைப்புக்களை படைத்ததான குற்றச்சாட்டும் உள்ளது.

மேற்கூறப்பட்ட மலையக எழுத்தாளர்கள் அனைவருமே மார்க்சிய சிந்தனைகளின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினையோ அல்லது என்.எஸ்.எம்.இராமையா, சாரல் நாடன் போன்றவர்களை தட்டிக்கொடுத்தமையை போன்றோ தெளிவத்தை ஜோசப்பை ஊக்கப்படுத்தாதமை கவனிப்புக்குரிய விடயமாகிறது.


சி.வி.வேலுப்பிள்ளையின் மலைநாட்டு தலைவர்கள் பற்றிய பேனா சித்திரங்கள் (1958 -1959) அவரின் தொடர் நாவல்களான “வாழ்வற்றவாழ்வு”, “எல்லைப்புறம”;, “பார்வதி” ஆகியன கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளிவந்தன.அத்தோடு சி.வி எழுதிய இறுதி நாவலான “இனிப்படமாட்டேன்” நாவலின் அவசியத்தை வலியுறுத்தி அதனை வுhந ர்ழடழ ஊயரளவ - யு ளவழசல ழக வாந 1981 நுவாniஉ ஏழைடநnஉந என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்த பெருமையும் கைலாசபதிக்கே உரியதாகும். அவ்வாறே சி.வியால் தொகுக்கப்பட்ட “மலையக நாட்டார் பாடல்” நூலுக்கும் முன்னுரை வழங்கிய கைலாசபதி, சி.வி அவர்களுக்கே அதனை தொகுக்கும் தகுதி உண்டென குறிப்பிடுகின்றார்.சி.வி.வேலுப்பிள்ளை மலையகத்தின் மூத்த படைப்பாளி என்பதும் கைலாசபதியின் கணிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும்.


அதுபோலவே சாரல் நாடன் எழுதிய ‘எவளோ ஒருத்தி’ என்ற சிறுகதையை பிரசுரித்த கைலாசபதி அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி தனது கைப்பட கடிதம் எழுதினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல் நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறியுள்ளார்.


அதேசமயம் கைலாசபதி தனது இறுதிக்காலத்திலும் மலையக இளந்தலைமுறையினரான தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கியத்துவம் மிக்க உறுப்பினர்களான இ.தம்பையா, சி.இராஜேந்திரன் முதலானவர்களை வளர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி இருந்ததனை அறியக்கூடியதாக உள்ளது.


ஆனால் இவ்வாறானதொரு நிலை தெளிவத்தை ஜோசப்பிற்கு ஏற்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்வோமானால் “தீ ” “சடங்கு” போன்ற நாவல்களில் பாலியலை வெளிப்படையாக எழுதிய எஸ்.பொவையே கைலாசபதி ‘இந்திரிய எழுத்தாளர்’ என்று முத்திரை குத்தி கருத்தில் எடுக்காத போது செக்ஸ் கதைகளை தான் எழுதியிருப்பதாக தெளிவத்தை ஜோசப்பே ஒப்புக்கொண்ட நிலையில் கைலாசபதி அவரை கவனத்தில் கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியமல்;ல என்றே தோன்றுகிறது.

அத்தோடு நிறுவன ரீதியான இயங்கங்களை கிண்டல் செய்தும் மலையகத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் குறித்து பாட்டாளி வர்க்க சர்வதேச நெறியில் தேசிய இலக்கியம் உருவாக உழைத்த கைலாசபதி மௌனம் காத்ததும் நியாயமானதே.
இது குறித்து தெளிவத்தை ஜோசப்
“ஈழத்து எல்லா இலக்கியங்களிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு, கலைச்செல்வி, சிரித்திரன் உட்பட தமிழகத்தின் கலைமகளில் கூட எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஈழத்து இலக்கியத்துக்கு செழுமையும் வலுவும் சேர்த்ததாக பேசப்படும் தினகரனில் என்னுடைய ஒரு படைப்புத்தானும் வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது?”
- ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் - ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001

என்று குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த 1959 – 1961ம் ஆண்டுக் காலப்பகுதியே தினகரன் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் தெளிவத்தை ஜோசப் 1950களின் பிற்பகுதியில் எழுத்துலகினுள் நுழைந்தாலும் அவரது முதற்படைப்பு வெளிவந்தது 1963ம் ஆண்டே.

தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் “பன்முக ஆய்வில் கைலாசபதி” நூலில்
“தினகரனில் நான் சேர்ந்த ஒரு சில வாரங்களில் கைலாஸ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று விட்டார். அவர்கீழ் பணியாற்றிய சில நாட்களுக்குள் பத்திரிகை தொழிலின் நெளிவுசுழிவுகளை வெகு ஆர்வத்துடன் சொல்லிக்கொடுத்தார் …………………………..அவர் தினகரனை விட்டு நீங்கி வி;ட்ட போதிலும் அடிக்கடி சந்தித்தபோது ஆலோசனைகளை அள்ளி வழங்கி உற்சாகப்படுத்தினார்.மரபுப்போராட்டம் தினகரனில் இடம்பெற்ற காலத்தில் அவர் எனக்களி;த்த ஆலோசனைகளும் குறிப்புகளும் பல”
என்று பதிவு செய்கின்றார். இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு தினகரனை விட்டு அவர் நீங்கிய பின்னும் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே.இந்தப்பின்னணியின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் மேற்படி கூற்றை ‘அவலை நினைத்து உரலை இடித்த கதையாவே’ அணுக வேண்டியுள்ளது.


1974இல் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை” நாவல் கலைச்செல்வி ஆசிரியரான சிற்பி அவர்களால் சாகித்திய மண்டலப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினரின் கருத்து முரண்பாடுகளால் பரிசீலனையின் பின் பரிசு பெறும் வாய்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சாகித்திய மண்டலப் பரிசு மாத்திரம் அல்ல எந்தவொரு அமைப்பினராலும் வழங்கப்படும் விருதாக இருந்தாலும் பெரும்பாலும் தனியொரு நபரால் எதேட்சாதிகாரமாக வழங்கப்படுவதில்லை. அதற்கென நியமிக்கப்பட்ட நடுவர் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுவது.நடுவர்குழுவில் இடம்பெறும் அத்தனை பேரும் ஏகமனதாக ஒரு நூலினையே தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது.சாகித்திய மண்டலத் தேர்வில் சிற்பி அவர்கள் மாத்திரமே இருந்திருப்பாரேயானால் அவரது தெரிவின்படி பரிசு கிடைத்திருக்கும்.ஆனால் அங்கும் நடுவர் குழாம் ஒன்று இருந்திருக்கின்றது.எனவே அவர்களோடு கலந்து இறுதி முடிவெடுக்காமல் சிற்பி அவர்கள் தன்னிச்சையாக அதிகாரபூர்வமற்ற முடிவை அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.


“காலங்கள் சாவதில்லை” நாவல் குறித்து முற்போக்கு அணியினரால் மலையக மக்களின் வாழ்க்கையை சொல்லும் அந்நாவலில் தொழிற் சங்க அரசியல் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இது குறித்து தெளிவத்தை ஜோசப் கூறுவது கவனத்தி;ற்குரியது.

“பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத ஒரு நிலையில் இம்மக்களின் போராட்ட உணர்வுகளை நான் பதிவு செய்யவில்லை என்று குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?”

- ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் - ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001



ஆனாலும் 1964 – 1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் மலையகத் தொழிலாளர்களிடையே மூன்று முக்கிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று அட்டன் பகுதியில் அமைந்துள்ள மேபீல்ட் தோட்ட வேலை நிறுத்தம், இரண்டாவது தலவாக்கொல்லைக்கு அண்மித்த மடக்கம்புற தோட்டப் போராட்டம், மூன்றாவது பதுளை மாவட்டத்தில் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் என்பன. இவற்றுள் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பி.இராமையா, லெ.அழகர்சாமி ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தம் உயிரை தியாகம் செய்திருந்தனர்.இதனால் தான் சி.கா.செந்திவேல் தனது “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்” நூலில்
“1939 - 40களில் சமசமாஜக்கட்சி, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுத்த போராட்டங்களை விட இப்போராட்டங்கள் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது” என குறிப்பிடுவதும் மனங்கொள்ளத்தக்கது.


எந்தவொரு படைப்பாளிக்கும் எரிகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதனையும் தீர்க்கதரிசனமாக கூற வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.

அந்தவகையில் மலையகத்தில் வர்க்கரீதியான அடக்குமுறை தலைவிரித்தாடியதை கருத்தில் எடுக்காதோடு பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத நிலையில் என்று தெளிவத்தை ஜோசப் கூறுவது முரண்நகையாகவே தோன்றுகிறது. ‘ரோம் நகர் பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போன்றே தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் காணப்படுகிறது.


1974ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு ‘காலங்கள் சாவதில்லை’ நாவலுக்கு வழங்கப்படாமல் அருள் சுப்ரமணியத்தின் “அவர்களுக்கு வயது வந்துவிட்டது” நாவலுக்கே வழங்கப்பட்டிருந்தது.அந்த நாவல் வெளிவந்த பிற்பாடே தமிழ்நாட்டில் இலங்கையின் நாவலுக்கு வயது வந்து விட்டது எனும்படியான ஆரோக்கியமான கணிப்புக்கு ஆளாகியிருந்தமை அந்த நாவலின் தரத்தினையே எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு அருள் சுப்ரமணியமும் முற்போக்கு அணியை சேர்ந்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் 1974ம் ஆண்டு ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் பற்றி ‘அலை’ இதழில் எழுதிய செ.யோகராசா அவர்கள் “ இது ஒரு சினிமாத்தனமான நாவல் என்றும், சில நல்ல எழுத்தாளர்களின் மோசமான படைப்புக்களை வரிசைப்படுத்தினால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் இது முதன்மையானது” என்றும் கூறுகின்றார்.

அதற்கு முன்னரே 1962ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இளங்கீரனின் “ நீதியே நீ கேள் ” நாவலுக்கு கிடைக்கும் என்ற பேச்சு பரவலாக அடிபட்ட நிலையிலும் இறுதியில் வ.அ.இராசரத்தினத்தின் “தோணி” சிறுகதை தொகுப்பிற்கே அது கிடைத்திருந்தது.இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவில் முற்போக்கு அணியினர் முட்டை எறிந்த விவகாரம்.எனவே சாகித்திய மண்டலப் பரிசு குறித்து இவ்வாறான சர்ச்சைகள் காலத்திற்கு காலம் நிகழ்வது ஒன்றும் புதிதல்ல.

1974ம் ஆண்டு சிறுகதைக்கான சாகித்திய மண்டலப்பரிசு டானியலின் “ உலகங்கள் வெல்லப்படுகின்றன” சிறுகதைத்தொகுதிக்கும், அ.யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்திருந்தன. தெளிவத்தை ஜோசப் கூறுகின்ற அதே கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் கைலாசபதியோடு கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டிருந்த அ.யேசுராசாவின் நூலுக்கு பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம்.

அதேசமயம் 1979ம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” சிறுகதை தொகுதி குறித்து பேராசிரியர் கைலாசபதி சற்று கடுமையாக விமர்சித்திருந்தாலும் அந்த வருடம் அந்நூலே சாகித்திய மண்டலப்பரிசினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.இதிற்கூட முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம் அல்லவா?


எனவே முற்போக்கு அணியை சாராதவர்கள் பேராசிரியர் கைலாசபதி தம்மை ஒதுக்கிவிட்டதாக கூறினாலும் அ.முத்துலிங்கம் போன்று தெளிவத்தை ஜோசப் அவர்களும் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கிறார் என்பது உண்மையே.இன்று அதே முற்போக்கு அணியை சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே “தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையகத்து மக்களின் வாழ்க்கை பற்றிய எமது அறிவு குறைவு பட்டதாகவே இருக்கும்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.அவ்வாறே முற்போக்கு அணியை சார்ந்த டொமினிக் ஜீவா,முருகையன், டானியல் போன்றவர்களும் இவரின் படைப்புக்களை சிலாகித்து கூறியுள்ளனர்.அப்படியானால் இவரின் படைப்பை நிராகரித்த முற்போக்கு இலக்கியவாதி யார்? இதற்கான விடையாக 36 வருடங்களுக்கு முற்பட்ட “காலங்கள் சாவதில்லை” நாவல் பிரச்சினையை தற்போது கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி பேராசிரியர் கைலாசபதி மீது தெளிவத்தை ஜோசப்பின் சேறுபூசும் செயலின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.





உசாத்துணை நூல்கள்;
1. பன்முக ஆய்வில் கைலாசபதி - தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடு
2. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் - சி.கா.செந்திவேல்
3. ஈழத்து இலக்கியம் : பல்துறை நோக்கு - சோமகாந்தன்
4. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் - க.கைலாசபதி
5. குறிப்பேட்டிலிருந்து - அ.யேசுராசா
6. மூன்றாவது மனிதன் - ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001
7. இலக்கிய சிந்தனைகள் - க.கைலாசபதி
8. திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் - மு.பொன்னம்பலம்
நவீன இலக்கிய  புனைவுகளில்
உருவ உள்ளடக்க சொல்லாடல்கள்”
-    சில அவதானிப்புக்கள் -

- சின்னராஜா விமலன் -

இலக்கியம் என்பது சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விளைபொருள். அதன் ஊடுபாவாக சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை இனங்காட்டி அவற்றிற்கான தீர்வையும் மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியவகையில் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அவ்விலக்கியமானது தான் எட்ட நினைத்த இலக்கினை அடைந்த திருப்தியை அதைப் படைத்தளித்த இலக்கியகர்த்தாவுக்கு ஏற்படுத்துகின்றது. குறிப்பாக புனைவு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் “கலை கலைக்காகவே” என்ற கோட்பாட்டின் வழியான புரிதலை நிராகரித்து “கலை மக்களுக்காகவே” என்ற கொள்கை ரீதியிலான அணுகுமுறையை கையாளும்போதே அது பரந்த வாசகர் மட்டத்தை எட்டுவதற்கான திறவுகோலாக அமையும். அவ்வாறானதொரு நிலை நோக்கி புனைகதை இலக்கியத்தை நகர்த்திச் செல்வதற்கான மூலோபாயங்களில் மக்களை இலகுவில் கவர்ந்திழுக்கும் படியான வடிவ உத்திகளை கையாளுதல் தலையாய விடயம்.
அந்நியக் கலை இலக்கியத் தாக்கத்தின் விளைவுகளாக எமக்கு கிடைத்தவையே நாவல், சிறுகதை போன்ற புனைகதை இலக்கிய வடிவங்கள்.உண்மையில் புனைகதை இலக்கியத்தில் வடிவம் குறித்த சில அடிப்படை சந்தேகங்களே இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அதாவது நவீன புனைவு இலக்கியத்தில் வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றை குறித்து நிற்கின்றதா? அல்லது ஒரு சிறுகதை யையோ,நாவலையோ எழுதி முடிப்பதற்காக ஒரு எழுத்தாளரால் கையாளப்படும் உத்திமுறைத் தெரிவான எடுப்பு,தொடுப்பு,முடிப்பு என்பவற்றின் முழுமையையும் உள்ளடக்கிய வெளிப்படுத்துகையினை குறித்து நிற்கிறதா? இது ஒரு விரிசிந்தனை க்கான தளத்தில் தனியே ஆராயப்பட வேணண்டிய விடயம். இக்கட்டுரை யானது வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றை குறிப்பதான பார்வையில் எழுதப்படுகிறது.

ஒரு கலைப்படைப்பின் வடிவ நிர்ணயிப்பில் பங்காற்றும் அம்சங்களாக கீழ்வரும் ஆறினை குறிப்பிடுகின்றார் “தமிழ் சிறுகதைகளில் உருவம்” என்ற நூலின் ஆசிரியரான கோ.கேசவன்.
1. கலைப்படைப்பின் உள்ளீடு திறன்கள், அதாவது அதன் உள்ளடக்கம்.
2. வர்க்க மனநிலை, அதாவது கலைஞனின் வர்க்க மனநிலை, கலைஞன் காட்டும் பாத்திரங்களின் மனநிலை.
3. அந்நியக் கலை இலக்கியத்தின் தாக்கம்.
4. பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத்துடிக்கும் முயற்சியும்.
5. கலைஞனின் பயிற்சி – பழக்கம், அவனது ஆழ்ந்த மனக்கிளர்ச்சி.
6. நுகர்வோர் தளத்தின் தரவேறுபாடு.

இதில் கேசவன் கூறும் பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் முயற்சியும் என்பதனை வகைமாதிரிக்கு எடுத்து நோக்குவோமாயின் பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழ் கவிதை பாரம்பரியத்தை சிந்து, தெம்மாங்கு, காவடி முதலான இலகுநிலை வடிவமாற்றங்களின் மூலம் மக்களின் இருப்பிடம் நோக்கிய ஒரு அசைவியக்கமாக நிகழ்த்திக் காட்டினான் பாரதி. இவ்விடத்தில் எந்த வடிவமும் அதற்கு முந்தைய எந்த வடிவத்திற்கும் மாற்று என்று எண்ணாமல் அம்மொழி வடிவங்களுள் இன்னொன்றான புதிய வரவு எனக்கொண்டால் மரபுவாதிகளும், நவீனத்துவவாதிகளும் தேவையற்ற முரண்பாட்டு உருவாக்கங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இவ்வாறே கவிதை தவிர்ந்த நவீன இலக்கிய புனைவுகளில் “கல்கி” போன்றவர்கள் பரந்துபட்ட மக்களுக்கும் புரியும்படியான வடிவமொன்றை கைவரப் பெற்றாலும் அவரின் உள்ளடக்கம் சார்ந்த அம்சங்களில் விமர்சகர்களின் பார்வை ஒருவித நிராகரிப்பின் அடியான, சாடல் மிகுந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதன் நீட்சி இன்றுவரை பல்வேறு பரிமாணமாய் படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் இடையே இருவேறுபட்ட கருத்து முரண்வெளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. அதாவது சொல்ல வந்த விடயத்தை எவ்வடிவத்தின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் இஸங்;களின் வழியான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட புரிதல் இன்மைகள் மற்றும் முரண்பாடுகள் என்பவை சர்ச்சைகளை தோற்றுவித்து உருவ உள்ளடக்க விவாதங்களை இன்றும் அரங்கேற்றிய வண்ணமே உள்ளன.
படைப்பாளிகளை மட்டுமல்லாமல் உருவ உள்ளடக்கத்தின் வகிபங்குகள் சிற்றிதழ்களிலும் தாக்கத்தை உண்டுபண்ணத் தவறவில்லை. இவ்வகைப்பட்ட சிற்றிதழ் போக்கிற்கு உதாரணமாய் சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இதழ் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் உருவவாத இதழாக முத்திரை குத்தப்பட்டதாகக் கூறுவர்.

ஒருவகையில் நவீன இலக்கியப் புனைவு சம்பந்தமான உருவ, உள்ளடக்க சர்ச்சைகள் இலக்கிய உலகில் புதுப்பொலிவைப் பெற உதவியது என்பது வாஸ்தவமே. இதனை உள்வாங்கி படைப்பாளிகள் நவீன இலக்கியப் புனைவுகளில் புதியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தியதை வரமாகக் கொண்டாலும், நேர்கோட்டில் ஒற்றைப் பரிமாணமாய் கதை சொல்வதை விரும்பாத எழுத்தாளர்கள் படிமத்தை குவியலாகப் பயன்படுத்தி வாசக நுகர்வுத் தளத்தை அல்லாட வைப்பதை சாபம் என்பதைத் தவிர வேறு எப்படி கூற முடியும்?
இலக்கிய உலகில் இன்றும் புரியாத புதிராக விளங்கும் மௌனியின் சிறுகதைகளை க.நா.சு, வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றவர்கள் உச்சமெனக் கொண்டாடி இருந்தாலும்;, பெரும்பான்மையான வாசகர்களின் மனங்களில் இருண்மைத்தன்மையின் இருப்பிடமாகவே அவரின் படைப்புக்கள் குடிகொண்டிருந்தன. அ.மார்க்ஸ் “மௌனியிடம் எப்போதுமே என்னால் ஒன்ற முடிந்ததில்லை” எனக்கூறுவதற்கும் மௌனியின் சிறுகதைகளில் கையாளப்பட்ட உள்ளடக்கமே காரணமாகிறது. எழுத்தாளர் நகுலன் “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று அழைக்கப்படுவதற்கும் அவருடைய படைப்பின் உள்ளடக்கம் சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டோரால் மாத்திரம் அணுகப்படுவதன் பிரதிபலிப்பினால் ஆகும்.
அதேசமயம் கோணங்கி போன்றவர்கள் வாக்கிய வடிவங்கள் நேரடியானதாக இல்லாமல் அது சிதையும் போதுதான் ஒரு கவிதைக்கான சாத்தியப்பாடு ஏற்படுகிறது என்று கருதினார்கள். இதனால் புரியாமலே போய்விடக்கூடிய எழுத்து உருவாகிற ஆபத்து அதில் இருந்தாலும்கூட அந்த ஆபத்தை எதிர்கொண்டு பயணிக்கலாம், அதுதான் உண்மையான இலக்கியம் என்றும் சொன்னார்கள். இவ்விடத்தில் “ஏழiஉiபெ கழடமடழசந”இ “குழடமடழசந யள னளைஉழரசளந” ஆகிய நூல்களின் ஆசிரியரான எம்.டி முத்துக்குமாரசாமி; வடிவம் என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதனை கீழ்வருமாறு குறிப்பிடுவது கவனிப்புக்குரியது.

“ஒரு ஒட்டுமொத்த வடிவங்களாக மட்டுமல்ல, அதை ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாகக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு சொற்கோர்வையினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு முழுப்படைப்பினுடைய வடிவமாக இருந்தாலும் சரி அந்த வடிவம் என்பது ரொம்ப முக்கியமானது. வாக்கிய அளவில் செய்யக்கூடிய சிதைவு இருக்கிறதே அது ஓர் அளவுக்குத்தான் உண்மையாக இருக்க முடியும்.அது கவிதையினுடைய வடிவத்திற்கு மட்டுமே சரியானது. சிறுகதைக்கோ, நாவலுக்கோ அது சரியானதல்ல.
- தீராநதி, ஜூலை 2007 -

ஆனாலும் இன்றைய காலப்பகுதியில் பின் நவீனத்துவத்தின் கட்டுடைப்பால் வடிவம் சார்ந்த பிரக்ஞையில் பின் நவீனத்துவவாதிகள் அதிகம் கவலை கொள்வதில்லை என்கிற யதார்த்த ரீதியான பிரசன்னத்தை அட்டவணைகள், புள்ளிவிபரங்கள் மூலமான புனைகதை வெளிப்படுகை முறைகள் எடுத்துக்காட்டுகின்றன.

வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தருவதான எண்ணப்பாங்கில் வரன் முறையான தளத்திலிருந்து விலகி இன்றைய நவீன புனைவு இலக்கியம் தறிகெட்டு போவதான உணர்வை இது வாசகர்கள் மத்தியில் வலுப்பெற வைத்துள்ளது.

ஒரு படைப்பாளி ஒரேயொரு நவீன இலக்கியப் புனைவுத்துறையில் மட்டும் அது கவிதையாகட்டும், சிறுகதையாகட்டும், நாவலாகட்டும் ஒன்றில் துறைபோர்ந்தவராக மிளிரும் சந்தர்ப்பத்தில் வடிவநிலைத் தெரிவு குறித்த சமுசயத்திற்கு இடமில்லாது போய்விடுகின்றது. ஆனால் ஒரு பல்துறை சார்ந்த இலக்கியகர்;த்தா படைப்பூக்க உந்தலினாலான மனோநிலைக்கு இயைபடைந்து வருகின்ற பொழுது அந்த விடயத்தை எந்தவொரு வடிவத்தினூடாக வெளிக்கொணர்ந்தால் படைப்பின் முழுமையும் பாதிப்புறாவண்ணம் சிருஷ்டிக்க முடியும் என்பதனை ஆளுமை மிக்க படைப்பாளியினால் அதனை இலகுவாக உய்த்துணர முடியும். இதற்கு அவருடைய எழுத்துலக அனுபவம் கைகொடுக்கின்றது.

இருப்பினும் சிறுகதை படைப்பொன்றை சிருஷ்டித்த ஓர் எழுத்தாளன் பிற்பட அதனை ஒரு குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ வடிவ மாற்றத்திற்கு உட்படுத்தும் பொழுது வடிவத்தை தீர்மானிப்பதில் அந்தப் படைப்பாளி தவறு செய்து விட்டாரா என்றதொரு முடிவுக்கு வர முடியுமா? ஏற்கனவே படைத்தளித்த சிறுகதையின் கருவைக் கொண்டு அதனை திறம்பட வளர்த்திச்செல்லும் லாவகமும், புதிய உருவார்ப்பும் அதன் ஊடாட்டமாக வாசகர் மத்தியில் ஒரு அனுபவத்தொற்றலை ஏற்படுத்த முடியுமாக அந்தப் படைப்பாளி கருதுமிடத்து சிறுகதையொன்று குறுநாவலாகவோ, நாவலாகவோ பரிமாணம் பெறுவதை தடுக்க முடியாது என்றே தோன்றுகின்றது.

அவ்வாறே ஒரு கவிஞரால் எழுதப்படும் சில கவிதைகள் ஒரே தலைப்பில் ஐஇ ஐஐஇ ஐஐஐ என வௌ;வேறுபட்ட காலப்பகுதியில் வெளிவருகின்ற பொழுதும் வடிவம் பற்றிய சர்ச்சை எழுகின்றது. தமிழக கவிஞரான சுகுமாரன் தான் “ஒரு பாடுபொருளில் ஒரு கவிதை எழுதினால் திரும்பவும் அப்பாடுபொருளில் கவிதை படைக்க மாட்டேன்” என்று கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது விவாதத்திற்குரியதொன்றாகவே படுகின்றது. ஒரு வகையில் இது அவரின் பாடுபொருள் பற்றாக்குறையின்மை தன்மையை வெளிப்படுத்துவதாக கருதினாலும் இன்னொரு புறம் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதிக்கிணங்க காலப்போக்கில் பாடுபொருளின் இயல்புகளும் மாறக்கூடும். அத்துடன் கவிஞனும் தன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தும் சமயத்தில் அப்பாடுபொருள் மீதான பார்வையும் பன்முகப்படுத்தப்படலாம்.

பா. அகிலனின் “தேனீரின் இறுதித்துளியை பகிர்ந்தாய்” எனத் தொடங்கும் யாத்திரை ஐஇ “அச்சத்தால் தறையப்பட்டிருந்தேன்” எனத்தொடங்கும் யாத்திரை ஐஐ, “சொப்பனத்துள்ளும் அச்சம்” எனத்தொடங்கும் யாத்திரை ஐஐஐ ஆகிய கவிதைப் பிரதிகளை படிக்கும் பொழுது லா.ச.ரா சொன்னாரே “ஒரே கதையைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்” என்பது போல பா. அகிலனும் “பலவேளைகளில் ஒன்றையே திரும்பத் திரும்ப நான் எழுதுவதாகப்படுகிறது” என அவரின் “பதுங்குகுழி நாட்கள்” கவிதைத் தொகுப்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது இக்கட்டுரையின் மையத்தை நோக்க்pய பயணிப்புக்கு துணைபுரிகிறது.
மறுதலையாய் நோக்கும் போது ஒரு பாடுபொருள் பற்றி ஒரு கவிதை எழுதிய பின்னர் அந்தப் படைப்பை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமோ என்றதொரு ஆதங்கம் படைப்பாளியிடம் மேலிடும் பொழுது இவ்வாறான கவிதைகள் தோற்றம் பெறக்கூடும். திருப்தியின்மைக்கும் கலைக்குமான தொடர்பு என்றும் போராட்டம் மிகுந்ததாகவே காணப்படுவது இதற்கு அடிப்படையாய் விளங்கலாம். ஆனாலும் ஒரு படைப்பு என்பது காலம் காலமாக ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வௌ;வேறு விதமான அர்த்தங்களை தரக்கூடியதாக இருப்பதனால் இவ்வாறான கவிதைகளின் தொடர்வருகை விவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்து கொண்டே இருக்கும். எது எவ்வாறிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் ஒரு கவிஞரைப் பின்பற்றி ஏனைய கவிஞர்களும் அவரை ஆதர்ஸமாக கொண்டு அவரின் பாணியில் இவ்வாறான கவிதைகளைப் படைப்பதும் வழக்கமாகி விட்டது.

சமூகத்தில் தன்னை பாதித்த விடயங்களை, பதிவு செய்ய விரும்புபவற்றை ஒரு எழுத்தாளன் தனக்கு வாய்த்த மொழியில் எழுத முற்படுகின்றான். இதன்போது ஒரே அனுபவத்தை இருவேறு வடிவங்களில் வெளிக்கொணரும் போது அது படைப்பாளியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் ஞானம் இதழில் வெளியான வீ. ஜீவகுமாரன் என்பவர் எழுதிய “கிராமத்து பெரிய வீட்டுக்காரி” சிறுகதை தந்த வாசிப்பு அனுபவமும், ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்ட “யாவும் கற்பனை அல்ல” தொகுப்பில் வெளிவந்த “கிராமத்து வீடும் என் முதல் காதலியும்” கவிதை தந்த வாசிப்பு அனுபவமும் ஒன்றாக இருப்பதை தேர்ந்த வாசகனால் உணரமுடியும்.
இவற்றை தொகுத்து பார்க்கின்ற பொழுது ஒரு சமயம் “ஈழத்திலக்கியம்” பற்றி ஜெயமோகன் கூறிய “தவறான கருவியால் (யதார்த்த வாதத்தால்) இலங்கை வாழ்வையள்ள படைப்பாளிகள் முயலும் போது திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பௌதீகவாழ்வே அகப்படுகின்றது. விளைவாக பல படைப்புகள் முதல் சில பக்கங்களிலேயே அலுப்புத்தருகின்றன” என்ற கலாநிதி ந. ரவீந்திரன் உட்பட பலரின் விமர்சனத்திற்கும் ஆளான கூற்று நினைவுக்கு வருகின்றது. வௌ;வேறு ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை படிக்கும்போதே ஒரேவிதமான அனுபவத்தொற்றலுக்கு உள்ளாகி அலுப்பு ஏற்படுகையில், ஒரு படைப்பாளியின் இரண்டு வௌ;வேறு வடிவநிலைப் புதினங்களில் ஒரே அனுபவம் கருப்பொருளாகும் பொழுது ஜெயமோகனின் கூற்றை ஆமோதிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகவே எனக்குப் படுகின்றது.

இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம்




நானும் இணைய உலகில் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன். எனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் 'அற்றைத்திங்கள்' வலைப்பதிவில் தொடர இருக்கிறேன்.
அன்புடன்

சின்னராஜா விமலன்